அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 1,500 பேருக்கு தண்டனை குறைப்பு – அதிபர் ஜோ பைடன்
Share
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார். 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா பரவல் அதிகரித்தபோது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்படுகிறது, வன்முறையற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிக நபர்களுக்கு கருணை காட்டப்பட்டுள்ளது. அதிபர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனை கைதிகள் திருந்தி வாழ இரண்டாவது வாய்ப்புகளை வழங்க முடியும்.
செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து, சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்காக விருப்பம் தெரிவித்தவர்களுக்கு மன்னிப்புகளும் தண்டனைக் குறைப்புகளும் வழங்கப்படுவதாக அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். பைடனின் கருணை நடவடிக்கையை மனித உரிமைக் குழுக்கள், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர். நீதி அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.