செக் குடியரசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு
Share
வடக்கு செக் குடியரசில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். செக் குடியரசின் தலைநகர் பிராக்கிலிருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோஸ்ட் நகரில் யு கோஜோட்டா என்ற ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 1 மணி வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டல் மற்றும் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 30 பேரை பத்திரமாக வெளியேற்றினர். இந்த தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.